பதிவு செய்த நாள்
01
மார்
2012
04:03
ஒளி வடிவமாகிய விநாயகப் பெருமானை, ஒலிவடிவிற்காட்டி அவரது அமைப்பையும் அருளையும் புகழ்ந்து கூறும் தோத்திர நூல் விநாயகர் அகவல். அவ்வையார், தான் பெற்ற அருள் அனுபவத்தை விநாயகரைப் புகழ்ந்து போற்றும் ஸ்தோத்திரமாகவும், இயக்கிப் பழகும் தொழில்நுட்பச் சாத்திரமாகவும் அருளியுள்ளார். பக்தர்களுக்குப் பூஜை நூலாகவும், யோகா பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சிக் கையேடாகவும் விளங்குகிறது. விநாயகர் என்றால், தலைவருக்கெல்லாம் தலைவர். அகவல் என்பது தமிழ்ப்பா வகைகளுள் ஒன்று. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை தமிழின் நான்கு பாவகைகளில், ஆசிரியப்பாவின் இன்னொரு பெயர் அகவல்பா. அகவல் என்றால் அழைத்தல். மயில் எழுப்பும் ஓசை அகவல் ஓசை. பறவைகள் தம்இனத்தை அழைக்கும் ஒலிகளைக் கூர்ந்து கேட்டு அவற்றின் ஒலி அமைப்பில் நுட்பமான வேற்றுமை கண்ட பழந்தமிழர்கள், பறவைகளின் ஒலிகளுக்கு வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். குயில் கூவுகிறது; மயில் அகவுகிறது; காக்கை கரைகிறது; என்று பறவை ஒலிகளை வேறுபடுத்தியது போலவே பாவகைகளையும் ஓசையின் அடிப்படையில் வெவ்வேறாக வகுத்தனர். அகவல் ஓசை உடையது அகவல்பா.
விநாயகரை வருக வருக என்று அழைக்கும் ஓசையில் அமைந்த நூலாகையால், விநாயகர் அகவல் என்ற பெயரை அவ்வையார் சூட்டினாõர். அவர் பாடியருளிய மற்றொரு ஆன்மிக நூல் ஒன்றுக்கும் பாவகை அடிப்படையில் அவ்வைகுறள் என்று பெயர் அமைந்தது ஒப்பு நோக்கத்தக்கது. விநாயகர் அகவல், எளிமை, இனிமை, மந்திர ஆற்றல் ஆகிய சிறப்புகளை உடையது. எளிய சொற்களைக் கையாண்டிருப்ப தால் எளிமையும், அகவல் ஓசை அமைந்திருப்பதால் இனிமையும், அனுபூதிமானாகிய அவ்வையின் அருள்வாக்கு என்பதால் பலிக்கும் மந்திர ஆற்றலும் இந்நூலில் பொதிந்துள்ளது. விநாயகர் அகவலை தினமும் ஓதினால், வாழும் முறையில் திருத்தமும், உள்ள உருக்கமும், உயிர்கள் மீது இரக்கமும் ஏற்படும். யோகமுறையில் பயிற்சி கிடைக்கும்.