ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பேட்டரி காரில் பயணிக்கும் பக்தரிடம் டிக்கெட் கொடுக்காமல் வசூல் வேட்டை நடக்கிறது. ராமேஸ்வரம் கோயில், பக்தர்களுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக 2013 முதல் கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் முதியோர், பெண் பக்தர்கள் ரதவீதியில் நடந்து சென்று தரிசிக்க சிரமம் அடைந்தனர்.
இதனை தவிர்க்க கோயில் நிர்வாகம் இரு பேட்டரி கார்களை வாங்கி ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் நியமித்தனர். இக்காரில் பயணிக்கும் பக்தருக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலித்து அதற்கான டிக்கெட் வழங்க கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. துவக்கத்தில் பேட்டரி காரில் அதிக வருவாய் கிடைத்த நிலையில், காலப் போக்கில் கோயில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டனர். இதனால் சில சமயம் குடும்பத்துடன் காரில் பயணிக்கும் பக்தரிடம் பணத்தை வசூலித்து, அதற்கான டிக்கெட்டுகளை டிரைவர்கள் கொடுப்பதில்லை. பக்தர்கள் டிக்கெட் கேட்டாலும், ‘நேரம் இல்லை. திரும்பி வரும் போது தருகிறேன். அதுவரை இங்கு காத்திருங்கள்’ என அலட்சியமாக டிரைவர்கள் கூறுவதால் பக்தர்கள் வேதனையுடன் செல்கின்றனர். டிரைவர்களின் வசூல் வேட்டைக்கு சில கோயில் ஊழியர்களும் உடந்தையாக இருப்பதால் கோயில் நிர்வாகத்திற்கு தினமும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே பேட்டரி காரில் முறையாக டிக்கெட் வழங்கி, கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் பெருக்க இந்து அறநிலைதுறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.