பதிவு செய்த நாள்
14
மார்
2019
02:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், தொன்மையான பழைய உற்சவர் சிலை சீரமைப்பு பணி, அதாவது, ஜடிபந்தனம் நேற்று (மார்ச்., 13ல்) துவங்கியது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடப்பதில் பல சிக்கல் ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின், பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. ஆனால், சுவாமி வீதியுலா நடைபெறவில்லை.பழைய உற்சவர் சிலையை சீரமைக் காததே இதற்கு காரணம் என, பக்தர்கள், நேற்று முன்தினம் (மார்ச்., 12ல்) போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அறநிலையத் துறை இணை ஆணையர், தனபால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., மாதவன், உதவி ஆணையர், ரமணி, உற்சவ உபயதார்கள், பொதுமக்கள் கோவிலில் கூடினர்.இதையடுத்து, நேற்று (மார்ச்., 13ல்) காலை, 11:00 மணிக்கு பழைய உற்சவர் சிலைக்கு, ஜடிபந்தனம் செய்யும் பணி துவங்கியது.
இன்று (மார்ச்., 14ல்) இரவு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி ஊர்வலமும், 17ல் திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இந்நிலையில், இணை ஆணையர் தனபால் கூறுகையில், சிலை சீரமைப்பு பணி முடியும் நிலையில் உள்ளது. இனி வரும் காலங்களில், பழைய உற்சவர் சிலையை கோவில் விசஷேங்களுக்கு பயன்படுத்தப்படும், என்றார்.