பதிவு செய்த நாள்
18
மார்
2019
12:03
திருவாலங்காடு: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், கமலத்தேர் திருவிழா நேற்று நடந்தது. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, 11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, இரவு நேரங்களில், உற்சவர் சோமஸ்கந்தர், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கமலத்தேர் திருவிழா, நேற்று நடந்தது.
காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு உற்சவ மூர்த்தியான சோமஸ்கந்தர், அம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட கமலத்தேரில் எழுந்தருளினார். அங்கு, உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்த பின், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி ஆகியோர், கமலத்தேரை வடம் பிடித்து இழுத்து, துவங்கி வைத்தனர். பின், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து, மாட வீதியில் இழுத்துச் சென்றனர். மதியம், காளியம்மன் கோவில் அருகில் தேர் நிறுத்தப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, மீண்டும் தேர் புறப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சித்துார் ஆகிய மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இன்று, இரவு, 10:00 மணிக்கு, நடராஜர் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இம்மாதம், 23ம் தேதியுடன், பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.