பெ.நா.பாளையம்: பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள, ஸ்ரீபூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 14ம் ஆண்டு பிரமோற்சவ விழா கருடக்கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் துவங்கிய பிரமோற்சவ விழா இம்மாதம், 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. கொடியேற்ற விழா சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இதில், கருடாழ்வாருக்கு அபிேஷக அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன.
அலங்கரிக்கப்பட்ட கருடக்கொடி கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவிலின் தலைமை அர்ச்சகர் நாராயணன் பட்டாச்சாரியார், வெங்கடரமண பட்டாச்சாரியார் ஆகியோர் கருடகொடியேற்றினர். பின்னர், மாலையில் நடந்த ஊர்வலத்தில் அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் சரஸ்வதி அலங்காரத்தில், அன்னவாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.அப்போது ஆண்டாள் கோஷ்டியினர் வண்ண ஆடைகள் உடுத்தி, பஜனை கோஷ்டியினருடன் பிருந்தாவன நடனமாடி விழாவில் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை, வைரமுடி சேவை புதன்கிழமை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.