திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, முருகன்- வள்ளி திருக்கல்யாணம் வரும் 21ம் தேதி நடக்கிறது.
இக்கோயிலில் பங்குனி உத்திர தினமான வரும் 21ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை நடக்கிறது.
அதிகாலை 5.30 மணிக்கு வள்ளியம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி சிவன் கோயிலை சேருகிறது. மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அதன்பிறகு மாலை 3.20 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயிலுக்கு வருகிறார். அங்கு வள்ளியம்மனுக்கு சுவாமி காட்சியளித்ததும் பந்தல் மண்டப முகப்பில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளியம்மன் தனிதனி சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகள் சுற்றி கோயிலை வந்து சேருகின்றனர். அன்றைய தினம் ராக்கால அபிஷேகம் கிடையாது. இரவ 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கபெருமான் - வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர் குமரதுரை செய்துள்ளனர்.