பதிவு செய்த நாள்
18
மார்
2019
03:03
பு.புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில், பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் விழா, கடந்த, 4ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில், பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நாளை, (மார்ச்., 19ல்)அதிகாலை, 4:00 மணிக்கு, நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதையொட்டி, வெயில், மழை தாங்கக்கூடிய அலுமினிய பந்தல் கோவில் வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்னரே, பக்தர்கள் கோவிலுக்கு வரத் துவங்கி விட்டனர். குண்டம் இறங்கும், பக்தர்கள் வசதிக்காக, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் வரிசை படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள், கோவிலில் குவிய துவங்கி உள்ளனர். கோவிலில் மேற்கொள்ளப்பட்ட, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, எஸ்.பி., சக்திகணேசன் தலைமையில், போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள, உணவு, குடிநீர், சுகாதாரம், தங்கும் வசதி, மருத்துவம் மற்றும் அம்மன் தரிசனத்துக்கான ஏற்பாடுகளை, கோவில் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். ஆய்வின்போது, கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், சத்தியமங்கலம், டி.எஸ்.பி., சுப்பையா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிறப்பு பஸ் இயக்கம்: பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக, அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இன்று (மார்ச்., 18ல்)இரவு, 19ம் தேதி அதிகாலையில் குண்டம் விழா நடக்கிறது.
இதனால் இன்று, நாளை (மார்ச்., 18,19ல்), மறு பூஜைக்காக, 25ம் தேதியும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தி, புளியம்பட்டி மற்றும் மைசூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் இயக்கப்படும்.