பதிவு செய்த நாள்
18
மார்
2019
03:03
ஈரோடு: பன்னிரு திருமுறை இன்னிசைக்கு, மண்புழு கூட ராஜநாகமாக மாறும், என்று, திருமுறை முற்றோதுதல் விழாவில், அரிகர தேசிகர் கூறினார்.
கோவை ஆனைகட்டி, திருமுறை சேவை மையம், சேலம் திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், பன்னிரு திருமுறை முறை முற்றோதுதல் விழா, ஈரோட்டில் மாதம் தோறும் நடக்கிறது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறை பாடல்களை பாடி, இசைத்து, அரிகர தேசிகர் விளக்கம் அளித்து வருகிறார்.
நேற்றைய 18ல் விழாவில் அவர் பேசியதாவது: தேவார தமிழிசை பாட்டுக்கு, மண்புழுவையும் ராஜநாகமாக மாற்றும் சக்தியுண்டு. எப்போதும் சிவனை நினைத்திருக்க வேண்டும். பெற்றோர், சிவனுக்கு சமமானவர்கள். அவர்களை தவிக்க விடுவது, இறைவனை தவிக்க விடுவதற்கு சமம். பணம், செல்வம், மனைவி, உறவினர்கள் இறந்த பின், உடன் வர மாட்டார்கள்; ஆனால், அவன் வருவான். நல்ல தலைமுறைகளை உருவாக்க, நால்வர் பாடல்களை குழந்தைகளுக்கு நாம் போதிக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும், பொழுதையும், சிவ வழிபாட்டுடன் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான சிவனடியார்கள், ஓதுவார்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.