திருப்புவனம்:திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாரநாடு கருப்பண்ணசாமி கோயில் மாசி களரி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனியில் மாசிகளரி விழா கொண்டாடப்படுகிறது. 24 மணி நேரமும் சாமியாட்டம் விடிய விடிய நடைபெறும். தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்கள் வரம் வேண்டி குறி கேட்டு செல்வது வழக்கம். விழாவின் தொடக்கமாக ராமநாதபுர அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் மாலை கருப்பண்ணசாமிக்கு அணிவிக்கப்படும்.அதன்பின் விழா தொடங்கும்.கோயில் முன்புறம் உள்ள கம்பத்தில் மாலையிட்டு பக்தர்கள் வணங்குகின்றனர். 15 அடி உயர கம்பம் விடியும் போது மாலைகளால் நிறைந்து காணப்படும். மற்ற கோயில்களை விட மாரநாடு கருப்பண்ணசாமி கோயில் முன் உள்ள கம்பத்தில் போடப்படும் மலர் மாலை வித்தியாசமாக இருப்பது வழக்கம். பக்தர்கள் பலரும் மாலைகளில் சீரியல் பல்பு பொருத்தி பேட்டரி இணைத்து மாலை விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் வண்ணம் செய்திருப்பர். இந்த மாலைகளை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை செய்து வணங்கினால் நினைத்த நல்ல காரியம் நடக்கும் என மக்கள் நம்புகின்றனர். மாசி களரியை முன்னிட்டு சிவகங்கை, மதுரை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பூஜைக்கான ஏற்பாடுகளை மாரநாடு மற்றும் சுற்று வட்டார கிராம பக்தர்கள் செய்திருந்தனர்.