பழநி கோயிலுக்குள் அலைபேசிக்கு தடை: பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2019 02:03
பழநி:பழநி முருகன் கோயில் உட்பிரகாரம், கருவறை பகுதிகளில் புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் பக்தர்கள் சிலர் ஆர்வக்கோளாறால் அலைபேசியில் படம் எடுக்க முயல்கின்றனர்.
அலைபேசிகளை செக்யூரிட்டிகள் பறிமுதல் செய்கின்றனர்.இந்நிலையில் கருவறையை அலைபேசியில் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. ஆகையால் திருப்பதி, மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது போல அலைபேசிகளை கோயில் வளாகத்திற்குள் கொண்டுசெல்ல தடைவிதிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.விஸ்வஇந்துபரிஷத் மாவட்ட இணைச்செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், பங்குனி உத்திரவிழா காலபூஜையின் போது அலைபேசியில் கருவறையை வீடியோ எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. இது செக்யூரிட்டிகள், அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. கோயிலுக்குள் அலைபேசிகளை கொண்டுசெல்ல தடைவிதிக்க வேண்டும் என்றார். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், வாட்ஸ் ஆப்பில் பரவும் வீடியோ சிலஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது. தற்போது எடுக்கவில்லை. அலைபேசி பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்கிறோம். சிலர் கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்று செயல்படுகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.