பதிவு செய்த நாள்
03
மார்
2012
11:03
ராசிபுரம்: நாகம்மாள் கோவிலில் நடந்த வளைகாப்பு திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் அருகில் நாகம்மாள், அங்காளபரமேஸ்வரி, சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஸ்வாமிக்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு 8ம் ஆண்டாக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு சமயபுரத்து மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல், சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் விழா துவங்கியது. அதை தொடர்ந்து, இரண்டு நாட்கள் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.நேற்று காலை 8 மணிக்கு, நெசவாளர் காலனியில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், முளைப்பாரி, தீர்த்தகுடம் எடுத்துக் கொண்டு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.அன்று பகல் 12 மணிக்கு, நாகம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் புற்றுக்கு மஞ்சள் குங்குமம் வைத்தும், வளையல் அணிவித்தனர். அதை தொடர்ந்து, நலுங்கு வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. தொட்டில் கட்டி வளையல், எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வைத்து தாலாட்டு பாடினர்.குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், தொட்டிலை ஆட்டி தங்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். மேலும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டி, பெண்கள் மடிச்சோறு வாங்கி சாப்பிட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.