சதுரகிரி கோயிலில் அன்னதான மடங்களுக்கு தடை: பக்தர்கள் கொதிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2019 11:04
மதுரை:மதுரையில் பழமையும், புராதன சிறப்புமிக்க சதுரிகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வளாகத்தில் இயங்கிய தனியாரின் ஏழு அன்னதான மடங்களுக்கு இந்து அறநிலைத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் நீண்ட தூரம் செங்குத்தான மலைகளை கடந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்க வழியில்லாமல் போனது.உயரமான மலைகளை கடந்து அடர்ந்த வனத்தில் சிறிய அளவில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் உள்ளன. பவுர்ணமி, அமாவாசை தினங்களில் மட்டுமே கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதிக்கிறது.
ஆடி அமாவாசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். கோயில் பகுதியில் ஏழு தனியார் அன்னதான மடங்கள் மூலம் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் விறகு அடுப்பில் சமைப்பது கிடையாது. சமையல் காஸ் மூலம் சமையல் செய்கின்றனர்.
தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. 25 கிலோ அரிசி மூடையை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு கொண்டு வர கூலி 500 ரூபாய். இதுபோல் ஒவ்வொரு பொருட்களையும் தலைச்சுமையாகவே அதிக கூலி கொடுத்து மடங்களின் நிர்வாகிகள் கோயில் பகுதிக்கு எடுத்து வந்தனர். ஆடி அமாவாசையன்று மட்டும் பல லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். இந்நடைமுறை தொன்று தொட்டு நிலவுகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி அன்னதான மடங்களுக்கு தடை விதித்து இந்து அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது. இது பக்தர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் ஆர்.பச்சையப்பன் கூறியதாவது: பக்தர்களின் வசதிக்காக 2.60 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 90 கழிப்பறைகள், தங்கும் விடுதிகள் உள்ளன. பிலாவடி கருப்பு கோயில் அருகே 8 அடி ஆழம், 6 அடி அகலம் கொண்ட கிணற்றில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. வனத்துறை ஒப்புதல் கிடைத்ததும் கிணற்றை மேலும் 20 அடிக்கு ஆழப்படுத்தப்படும்.
கோயில் பகுதியில் செயல்படும் சில மடங்களின் சமையல் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக உயர் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்குத் தொடர்ந்தார். ஆய்வுக்கு பின் மடங்கள் இயங்க தடை செய்யப்பட்டது. அடிவாரத்தில் சமைத்து கோயிலில் வழங்க தடை இல்லை, என்றார்.