பதிவு செய்த நாள்
04
ஏப்
2019
02:04
பள்ளிபாளையம்: அக்னிமாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பள்ளிபாளையம் அடுத்த, ஆவாரங்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற அக்னிமாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா, கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும், அபிஷேக, ஆராதனைகள் நடந்து வந்தன. பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று (ஏப்., 3ல்)நடந்தது. இதில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள், தீமிதித்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதையடுத்து, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.