பதிவு செய்த நாள்
04
ஏப்
2019
02:04
அரூர்: தீர்த்தமலையில் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல், குரங்குகள் தவித்து வருவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை மீதுள்ள இக்கோவிலில் ஏராளமான குரங்குகள் உள்ளன.
இந்நிலையில், கடும் வெயிலால், தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் குரங்குகள் தவித்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: தீர்த்த மலை அடிவாரத்தில் இருந்து, மலை மீதுள்ள கோவிலுக்கு செல்லும் வழியில், ஏராளமான குரங்குகள் உள்ளன. அவற்றின் குடிநீர் தேவைக்காக வழி முழுவதும், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லாததால், குரங்குகள் அவதி அடைகின்றன. பாறை இடுக்குகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள, தண்ணீரை குடித்து, தங்களது தாகத்தை தீர்த்து வருகின்றன.
மேலும், பக்தர்கள் கொண்டு வரும் பைகளில் தண்ணீர் இருக்கும் எனக்கருதி அவற்றை குரங்குகள் பறித்து செல்கின்றன. இதனால், பக்தர்களும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மலைக்கு செல்லும் வழியில் உள்ள குடிநீர்த் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.