பதிவு செய்த நாள்
04
ஏப்
2019
02:04
சேலம்: எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில், திரளான பக்தர்கள், பொங்கல் வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம், வின்சென்ட், எல்லைப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா, கடந்த மார்ச், 19ல் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 4:00 முதல், திரளான பெண்கள், பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஏப்., 4ல்) மாலை, பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவர். அதற்காக, மதியத்துக்கு மேல், ஏற்காடு சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. நாளை (ஏப்., 5ல்), பால்குட ஊர்வலம், வண்டிவேடிக்கை நடக்கிறது. ஏப்., 6ல் சத்தாபரணம், 7ல் மஞ்சள் நீராட்டம், 8ல் குத்து விளக்கு பூஜை நடக்கிறது.
தீ மிதி விழா: இளம்பிள்ளை ஏரிக்கரையிலுள்ள, மாரியம்மன், காளியம்மன் கோவில்களின் பங்குனி திருத்தேரோட்ட விழா, கடந்த மார்ச், 29ல் தொடங்கியது. நேற்று (ஏப்., 3ல்) காலை, மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை, காளியம்மன் கோவிலில் சக்தி அழைத்தல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, திரளான பக்தர்கள், குண்டம் இறங்கி, வேண்டுதலை நிறைவேற்றினர். அதேபோல், வேம்படிதாளம், மாரியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தனர்.
பால்குட ஊர்வலம்: வீரபாண்டி, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, தீர்த்தக் குடம், பால்குட ஊர்வலம், நேற்று (ஏப்., 3ல்) நடந்தது. அங்காளம்மன் கோவிலிலிருந்து தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, பால் மற்றும் தீர்த்தத்தால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று (ஏப்., 4ல்) காலை, பொங்கல் வைத்தல், நாளை (ஏப்., 5ல்) அலகு குத்துதல், பூங்கரகம், அக்னி கரகம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அதேபோல், அரியானூர் மகா சக்தி மாரியம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் நடந்தது.
தீச்சட்டி ஊர்வலம்: பெத்தநாயக்கன்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், குடுவாத்து பாலம், புதுப்பட்டி மாரியம்மன் கோவிலில், நேற்று (ஏப்., 3ல்) காலை முதலே, 200க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, பெரியகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்திலிருந்து பூங்கரகம், மாவிளக்கு மற்றும் தீச்சட்டி எடுத்துக்கொண்டு, பலர், ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். இரவு, கோவில் முன்புறம் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில், பலர் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.