பதிவு செய்த நாள்
06
ஏப்
2019
12:04
அவிநாசி:கொளுத்தும் வெயிலில், சின்ன கருணைபாளையம் பக்தர்கள், 3 கி.மீ., குதிரையை சுமர்ந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, வரும், 9ல் துவங்கி நடக்கிறது. இதற்காக, ஆண்டுதோறும் கொடியேற்றத்துக்கு முன், வரும் வெள்ளியன்று, சின்ன கருணைபாளையத்திலிருந்து, ஆகாசராயர் கோவிலுக்கு குதிரை கொண்டு செல்வர். அவ்வகையில், நடப்பாண்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சின்ன கருணைபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலிலிருந்து, மண்ணால் தயாரிக்கப்பட்ட குதிரைகளுக்கு, உயிர் கொடுத்து, சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்து வழிபட்டனர். அதன்பின், சின்ன கருணைபாளையத்தில், பெரிய கருணைபாளையம், கவுண்டம்பாளையம், காசிகவுண்டம்புதுார், மங்கலம் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.வழி நெடுகிலும் பொதுமக்கள், பக்தர்களுக்கு தண்ணீர், நீர் மோர் வழங்கியும், மாலைகள் கொடுத்தும் வரவேற்றனர். பின்பு ஆகாசராயர் கோவிலில் குதிரைகளை வரிசையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.ஆகாசராயர் சுவாமி மற்றும் காத்தவராய சுவாமிக்கு அலங்காரம் செய்விக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பக்தர்கள் நேர்த்திக்கடனாக, கிடா வெட்டி வழிபட்டனர். நிகழ்ச்சியில், சின்ன மற்றும் பெரிய கருணைபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.