சாதாரணமாக, எல்லா ஜனங்களுக்குமே தெய்வசிந்தனை இருக்கத்தான் வேண்டும். மனுஷ்யஜீவன், அந்தப் பெயருக்கு லாயக்காக இருக்க வேண்டுமானால், தனக்கு ஜீவசக்தியைக் கொடுத்த சுவாமியை சிந்தித்து, அவன் அருள்வழி காட்டுகிறபடி தான் ஜீவனம் நடத்த வேண்டும். இந்த தெய்வசிந்தனை நாமே பண்ணுவதாக இருந்தால், நம்முடைய சித்தம் (மனம்) ஓடுகிற தாறுமாறான ஓட்டத்தில் உருப்படியாக ஒன்றும் தேறாது. அது மாத்திரமில்லாமல், நமக்கு சுவாமியைப் பற்றி சொந்த அனுபவமாக என்ன தெரியும்! நமக்குத் தெரியாதவரைப் பற்றி நாம் என்னத்தைச் சிந்திக்க முடியும்? இங்கே, அப்படி தெரிந்து கொண்ட பெரியவர்கள் பாடிய ஸ்தோத்திரங்கள், தமிழ் முதலான பிரதேச பாஷைகளில் இருக்கின்றன. அவை நமக்கு கைகொடுத்து தூக்கி விட ஓடி வருகின்றன. சுவாமியைப் பற்றி தெரிந்து கொண்ட பலபேர், பலகாலமாக அதைச் சொல்லி சொல்லி அவற்றுக்கு தெய்வீகசக்தி கூடிக்கொண்டே வந்திருக்கும். அவற்றைச் சொல்வதே நம்முடைய சித்தத்தை சுவாமியிடம் சேர்த்து வைக்கும். நம்தேசம் செய்த பாக்கியம், இம்மாதிரி ஸ்துதிகள் ஒவ்வொரு தெய்வத்தையும் குறித்து கணக்கு வழக்கு இல்லாமலிருக்கின்றன. நம்தேசத்திலும், இந்த தமிழ்நாட்டில் பிறந்தவர்களின் பாக்கியம், இங்கே தோன்றிய நம் முன்னோர்கள் நம்முடைய தமிழ் பாஷையில் துதிகளை அப்படியே கொட்டி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஜனங்கள் பாராயணம் செய்ய வேண்டும்.