பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
03:04
காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் வீராநராயண பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று தேரை பக்தி பரவசத்தோடு இழுத்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் பழமை வாய்ந்த வீரநாராயணபெருமாள் கோவிலுக்கு அச்சுத்தேர் கிடையாது.
திருவிழாவின்போது மட்டும் தேர் கட்டப்டபட்டு வீதியுலா நடந்து வந்தது.இந்நிலையில், யமுனை துறைவர் கைங்கர்ய சபை யினர் வீரநாராயண பெருமாளுக்கு ரூ.40 லட்சம்
செலவில், அச்சுத் தேர் செய்து கொடுத்தனர். கடந்த மாதம் 31ம் தேதி தேர் வெள்ளோட்டம் விட அறநிலைய துறையிடம் அனுமதி கேட்டபோது, தேர்தலை காரணம் காட்டி, ஆணையம்
அனுமதி வழங்க மறுத்தது. தேர் வெள்ளோட்டம் தடை பட்டது.இதுகுறித்து தினமலர் நாளிதழில், கடந்த 31 ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இப்பிரச்னை கலெக்டர் அன்புச்செல்வன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து, தேர் வெள்ளோட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, நேற்று (ஏப்., 10ல்) தேர் வெள்ளோட்டம் நடந்தது.முன்னதாக காலை 6 மணிக்கு ஹோமம் துவங்கியது.
கலசம் வைத்து யாகசாலை பூஜை நடத்தப்பட்டு 10 மணிக்கு தேரில் கலசம் வைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கரகோஷத்துடன் தேர் வெள்ளோட்டம் துவங்கியது. கோவில்
நிலையில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு வீதி, மேலவீதி, கச்சேரி ரோடு, ரெட்டியார் வீதி வழியாக சென்று மீண்டும் 1 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது. இம்மாதம் 19 ம்
நடைபெறும் விழாவில் புதிய தேர் பயன்பாட்டிற்கு வரும்.தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், மின் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.