பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
12:04
பழநி: பங்குனி உத்திரவிழா முடிந்த பின்னரும், பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் அலகுகுத்தி, தீர்த்த காவடியுடன் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
பழநியில் தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற பங்குனி உத்திர விழா கடந்தமாதம் மார்ச் 15 முதல் மார்ச் 24 வரை நடந்தது. இவ்விழாவில் கலந்து கொள்ள இயலாத பக்தர்கள் சனி, ஞாயிறு, கார்த்திகை, சஷ்டி போன்ற முக்கிய தினங்களில் வருகின்றனர்.
குறிப்பாக திருப்பூர், தாராபுரம், கோவை, காங்கேயம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தீர்த்தக்காவடி எடுத்து பழநி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகின்றனர். நேற்று (ஏப்., 11ல்) சஷ்டி தினத்தை முன்னிட்டு, தாராபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள், மயில்காவடி, தீர்த்தக்காவடி எடுத்தும், ஒருவர் 20 அடி நீளமுள்ள அலகு குத்தி கிரிவீதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பக்தர்கள் மலைக்கோயிலில் தீர்த்தக்காவடி, பால் காவடி எடுத்து வந்து பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.