இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2012 11:03
மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலான இனாம் சமயபுரத்தில் ஆதி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மேஷ லக்னத்தில் பூச்சொரிதல் விழாவும், மாசி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும் நடப்பது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 12ம் தேதி ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தேவஸ்தானம் சார்பில் நடந்தது. அடுத்தடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டாவது வார, மூன்றாவது வார பூச்சொரிதல் விழா நடந்தது. கடந்த 27ம் தேதி அம்பாள் கேடயத்தில் புறப்பட்டு திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அடுத்தடுத்த நாட்களில் சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனங்களில் ஸ்வாமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து திருத்தேருக்கு புறப்பாடாகி காலை 9.40 மணிக்கு தேர்வலம் வரத்துவங்கியது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்தனர். தேர் இனாம் சமயபுரத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து காலை 11 மணிக்கு நிலை அடைந்தது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் பொன் செல்வராஜ் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.