சீதையை இலங்கைக்குக் கடத்தி சென்றான் ராவணன். வழியில் கோதாவரி நதியை பார்த்து, ’அம்மா! உன்னைப் போல நானும் ஒரு பெண்! எனக்கு நேர்ந்த துன்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாயே!” எனக் கதறினாள் சீதை. மனைவியைத் தேடியபடி ராமர் வந்தபோது, ’தாயே! சீதையைப் பார்த்தாயா?” என்று கோதாவரியிடம் கேட்டார். ராவணனால் தனக்கு தீங்கு நேருமோ என்ற பயத்தால், கோதாவரி உண்மையைச் சொல்லவில்லை. தீயவர்களுக்கு உடந்தையாக, அமைதி காப்பது குற்றம் தானே! இதனால் கோதாவரிக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க ஒரு வாய்ப்பு பின்னாளில் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் நந்த வனத்தில் கண்டெடுத்த பெண்குழந்தைக்கு ’கோதா’ (கோதாவரி) எனப் பெயரிட்டார் பெரியாழ்வார். அந்த புண்ணியத்தின் பயனாக கோதாவரியின் பழி நீங்கியது.