காரைக்குடி:கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் புனித வாரத்தின் முதல் நாளை முன்னிட்டு நேற்று (ஏப்., 15ல்) காரைக்குடியில் உள்ள ஆலயங்களில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது.
இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் சென்றபோது, பக்தர்கள் குருத்தோலை ஏந்தி அவரை வரவேற்றனர். அதை நினைவு கூறும் வகையில் புனித வாரத்தின் முதல்நாளை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடை பிடிக்கின்றனர்.காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்தில் குருத்து ஞாயிறு பவனி செக்காலை அம்பேத்கர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலியும், ரத்ததானமும் நடந்தது. ரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
காரைக்குடி அரசு மருத்துவமனை டாக்டர் அருள்தாஸ் தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.இதே போல் செஞ்சை தூய குழந்தை தெரசாள் ஆலயத்தில் சகாயராஜ், அரியக்குடி வளன்நகர் குழந்தை யேசு ஆலயத்தில் மைக்கேல், ஆவுடைப்பொய்கை புனித அந்தோணியார் ஆலயத்தில் ராஜமாணிக்கம், மானகிரி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஜெரால்டு தலைமையில் குருத்தோலை ஊர்வலமும், திருப்பலியும் நடந்தது
* திருப்புத்தூர்:- திருப்புத்தூர் ஆர்.சி.கிறிஸ்தவ தூய அமல அன்னை ஆலயத்தில் குருத் தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.ஏசுவின் அரசாட்சி பவனியை பறைசாற்றும் வகையில் அங்கிருந்து குருத்தோலை ஏந்தியபடி துதிப்பாடல்கள் பாடி ஊர்வலமாகப் புறப்பட்டனர். முக்கிய சாலைகளில் வழியாக சென்ற ஊர்வலம் மதுரை ரோடு வேளாங்கன்னி கெபியை அடைந்தனர். பங்குத் தந்தைகள் மதுரை சேவியர் ராஜ், தேவகோட்டை வளன், லூர்துசாமி பங்கேற்றனர்.