பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
03:04
கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சமலையில், நடராஜ மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, 32 லட்சம் ரூபாய் செலவில், வரும், 22ல், புதிய கோவில் கட்டுமான பணி துவங்குகிறது. கோபி,
பச்சமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது.
அர்த்த மண்டப வளாகத்துக்குள், தேக்கு மர கனக சபையில் நடராஜ மற்றும் சிவகாமி அம்பாள், பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
காலங்காலமாக தேக்கு மர கனக சபையில், அருள் பாலிக்கும் நடராஜ மற்றும் சிவகாமி அம்பாளுக்கு தனியாக சன்னதி கட்ட, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, காலபைரவர் சன்னதி அருகே கோவில் கட்ட இடம் தேர்வு செய்துள்ளனர். 12 அடி நீளத்தில், 16 அடி அகலத்தில், 13 அடி உயரத்தில், கோவில் உபயதாரர் நிதியாக, 32 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி துவக்க விழா வரும், 22ல், கோலாகலமாக நடக்கிறது. இதற்கான கட்டமைப்பு பணிக்காக, திருநெல்வேலி யில் இருந்து, ஆகமவிதிப்படி கற்கள் நேற்று (ஏப்., 17ல்) கொண்டு வரப்பட்டது. கட்டமைப்பு மற்றும் திருப்பணி துவக்க விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.