பதிவு செய்த நாள்
07
மார்
2012
11:03
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா அபிஷேகத்தையொட்டி உலக நன்மை வேண்டி மகா ருத்ர யாகம் நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடக்கிறது. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன காலங்களில் ஆயிரங்கால் மண்டபத்திலும், நடராஜர் வீற்றிருக்கும் சபைக்கு எதிரில் கனகசபையில் நான்கு முறையும் மகா அபிஷேகம் நடக்கிறது. மாசி மாதத்தில் நடக்கும் மகா அபிஷேகம் நேற்று நடந்தது. பொது தீட்சிதர்கள் சார்பில் உலக நன்மை வேண்டி கோவில் நடன பந்தலில் நேற்று அதிகாலை முதல் அதிருத்ர மகா பாராயணம், மாலையில் யாகம் நடந்தது. 121 தீட்சிதர்கள் மந்திரம் சொல்லி பாராயணம் செய்தனர். மகா அபிஷேகத்தையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கனகசபையில் எழுந்தருளச் செய்யப்பட்டு காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை நடந்தது. யாக சாலையில் கலச பூஜை, சிறப்பு அர்ச்சனை, ஜப பூர்த்தி முடிந்து மாலையில் மகா அபிஷேகம் நடந்தது. குடம், குடமாக பால், தயிர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், பூ ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாசி மகா அபிஷேகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.