பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
11:04
திருவொற்றியூர்: வட்டப்பாறை அம்மன் உற்சவம், கொடியேற்றத்துடன், கோலாகலமாக துவங்கியது.
திருவொற்றியூர், தியாக ராஜ சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் வளாகத்தில், வடதிசை நோக்கி, வட்டப்பாறை அம்மன் சன்னிதி உள்ளது.ஆண்டுதோறும், சித்திரை மாதம், வட்டப்பாறை அம்மன் உற்சவம் நடக்கும். இவ்வாண்டு, வட்டப்பாறை அம்மன் உற்சவம், நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, சன்னிதியில் வீற்றிருக்கும் அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.சன்னிதி முன் உள்ள, கொடிமரம் அருகே, உற்சவ தாயார் எழுந்தருளினார். கொடிமரத்திற்கு, மஞ்சள் நீர், பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. வர்ணிப்பு, மஹாதீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பரவசத்துடன் வழிபட்டனர்.வரும், 4ம் தேதி இரவு, கொடியிறக்கத்துடன் விழா நிறை பெறும்.