பதிவு செய்த நாள்
03
மே
2019
11:05
மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருப்புன்கூரில் அமைந்துள்ள சிவலோகநாதர் சுவாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூரில் சௌந்திரநாயகி அம்பாள் உடனாகிய சிவலோகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல் பெற்றதும், நந்தனாருக்காக நந்தி விலகி தரிசனம் அளித்த தலமான இங்கு பிரம்மா, இந்திரன், சூரியன், அகஸ்தியர், சுவாமியை பூஜித்து சாபம்,பாவம் நீங்க பெற்றுள்ளனர். இந்த கோவிலில் மழை பெய்யவும், நிற்கவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவார பதிகம் பாட மழை பெய்தும் பின்னர் நின்றும் நாடுசெழித்தது. அதற்கு மானியமாக 24வேலி நிலத்தை சோழ மன்னர் கோவிலுக்கு வழங்கியுள்ளார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் நேற்று இந்து சமய அறநிலையதுறை உத்தரவின்படி மழை வேண்டி ருத்ர யாகம் மற்றும் வருண ஜபம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகாமண்டபத்தில் 22 கலசங்களி ல் புனித நீர் வைக்கப்பட்டு ருத்ர ஹோமம், ருத்ர ஜபம், ருத்ர பூஜை, வருண ஜபம் மற்றும் ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு வேதோ உபசாரம், திருமுறை பாராய ணம், நாதோ உபசாரம், நாட்டிய உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபா ராதனை நடைபெற்றது. அதனையடுத்து நந்திதேவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தோட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தன ர். யாகம் மற்றும் பூஜைகள் கோவில் அர்ச்சகர் பாலாஜி, செதலபதி, சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் அவரது சீடர்கள் செய்துவைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.