திருவொற்றியூர்:மழை வேண்டி, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, வருண யாகம் நடந்தது.ஹிந்து அறநிலையத்துறை அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில், மழை வேண்டி, வருண யாகம் நடந்து வருகிறது.
அதன்படி, திருவொற்றியூர் காலடிபேட்டையில், சின்ன காஞ்சிபுரம் என்றழைக்கப்படும், 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை, வருண யாகம் நடைபெற்றது.கோவில் மண்டபத்தில், உற்சவரான, பவள வண்ண பெருமாள், ஸ்ரீ தேவி - பூதேவி தாயாருடன், துளசி மற்றும் மலர் அலங்காரத்தில் எழுந்தளினார். உற்சவ தெய்வங்களுக்கு முன், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. பட்டாச்சார்யார்கள், வேத மந்திர பாராயணம் மற்றும் வருண காயத்ரி மந்திர பாராயணம் முழங்கினர்.நான்கு மணி நேரம் தொடர்ந்த, வருண யாகத்தின் முடிவில், மஹா பூர்ணாஹூதி நிறைவு பெற்று, கலச புனித நீரால், பவள வண்ண பெருமாள் மற்றும் தாயார்களுக்கு அபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில், மழையை வரவழைக்கும் விதமாக, தவில், நாதஸ்வரம், வயலின் உள்ளிட்ட வாத்திய கருவிகளில், மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, கோதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களும் வாசிக்கப்பட்டன.