தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண்பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. முதல்நாளிலேயே பக்தர்கள் முல்லை பெரியாற்றில் நீராடி மேளதாளத்துடன் கோயிலுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை எடுத்தல், முடி காணிக்கை, மாவிளக்கு எடுத்தல், நெய்தீபம் ஏற்றுதல் என பக்தி பரவத்தோடு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆற்றில் ஏராளமானோர் நீராடியதால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
திருவிழாவை ஒட்டி பஸ் போக்குவரத்து பைபாஸ் வழியாக அனுமதிக்கப்பட்டது. இதனால் பைபாஸ் ரோடு வழியாக பக்தர்கள் சிரமம் இன்றி சென்றனர். முல்லை பெரியாற்றில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நாட்களில் கூடுதல் நீர் திறப்பு இருக்கும். இதனால் பக்தர்கள் சுகாதாரமான முறையில் நீராடி நேர்த்திகடன் செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு இல்லை. எனவே அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் குளிக்க சிரமம் ஏற்பட்டது.திருவிழாவையொட்டி வீரபாண்டி 14ம் தேதி வரை துாங்கா நகரம் போல் செயல்படும். வேடிக்கை விளையாட்டுகள், பொழுது போக்கு அம்சங்களுடன் களை கட்டும். அம்மன் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு மலர் விமானத்தில் பவனி வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 650 போலீசார் ஷிப்டுமுறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று இரண்டாம் நாள் திருவிழாவில் அம்மன் முத்து பல்லக்கில் வீதி உலா வருகிறார்.