மெக்கா நகரிலுள்ள காபா புதுப்பிக்கப்பட்டது. அங்கு ’ஹஜருல் அஸ்வத்’ என்னும் புனிதமான கல்லை பதிப்பது யார் என்பதில் மெக்கா நகரத் தலைவர்களுக்குள் சண்டை ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் அவர்களில் ஒருவர், ”நாளை யார் காபாவுக்குள் முதலில் வருகிறாரோ, அவரிடம் இந்த பிரச்னையை விட்டு விடுவோம்.
யாரை அவர் காட்டுகிறாரோ, அவரே கல்லைப் பதிக்கட்டும்” என்று யோசனை கூறினார். அனைவரும் சம்மதித்தனர். மறுநாள் காலையில், ’அல்அமீன் வருகிறார்’ என்று குரல் கேட்டது. ’நம்பிக்கையாளர் வருகிறார்’ என்பது இதன் பொருள். அப்போது நபிகள் நாயகம் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர் மீதுள்ள மரியாதையால், புனிதப்பணியை அவரிடம் ஒப்படைத்தனர். ஒரு போர்வையை எடுத்து வரச் சொன்னார் நாயகம். ’கல்லைப் பதிப்பதற்கு போர்வை எதற்கு?’ என அனைவரும் குழம்பினர். போர்வையில் கல்லைத் தூக்கி வைத்தபின், ஒரே நேரத்தில் அனைவரும் போர்வையின் நுனிகளை பிடித்து கல்லைத் தூக்குங்கள்” என்றார். மகிழ்ச்சியுடன் தூக்கினர். இதனால் புனிதக்கல்லை பதிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்தது. சண்டையும் தவிர்க்கப்பட்டது. எங்கும் எதிலும் சமத்துவம், சகோதரத்துவம் இருக்க வேண்டுமென அங்கேயே போதித்தார் நாயகம்.