பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
03:06
அற்புதமான அரண்மனை ஒன்றைக் கட்டி, அதற்குப் ""புது அரண்மனைப் புகுவிழா என்ற விழா ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன். அந்த ஆனந்த விழாவிற்குப் பஞ்சபாண்டவர்களையும் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்று பாண்டவர்களும் வந்திருந்தனர். இதுதான் தக்க சமயமென்று வஞ்சகன் சகுனி அவர்களை சூதாட அழைத்தான்.
முதலில் மறுத்த தருமனை மாயையால் மயக்கி விட்டான் சகுனி. தருமரும் சூதாட ஒப்புக் கொண்டார். விளைவு, நாடிழந்து, அனைத்தையும் இழந்து கானகம் சென்றனர் பாண்டவர்கள். இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு மனிதனுக்கு எது எப்போது வரும். அது எப்படி வரும்? வருவது துன்பமா? இல்லை இன்பமா? என்பதுகூடத் தெரியாது. அது வந்த
பின்புதான் தெரியும்.
இன்றைய மனிதர்கள் இன்பம் வரும்போது அதை அனுபவிக்கின்றனர். அப்போது எதுவும் தெரிவதில்லை. துன்பம் வரும்போது தவிக்கின்றனர். துன்பத்திலிருந்து விடுபடத் துடிக்கின்றனர். நேராக ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோஸ்யரிடம் போகின்றனர். ஜோஸ்யத்தைப் பார்த்து ஜோதிடர் துன்பம் ஏன் வந்தது என்பதைக் கணக்கிட்டு காரணத்தைக் கூறுகின்றனர். அதற்குப் பரிகாரம் என்று சிலவற்றைச் சொல்ல அதைச் செய்கின்றனர்.
ஜோதிடம் என்பது வேதங்களின் ஒரு பகுதி. வேதங்கள் நான்கு.
உபவேதம் நான்கு. இதில் வேதாங்கங்கள் என்பது ஆறு. இந்த ஆறு
வேதாங்கங்களில் "ஜ்யோதிஷம் என்பது ஒன்று, ஆக ஜோதிடம் பொய்யாகாது என்பது உண்மையே. காரணம், இதைப் பற்றி வேதமே சொல்லி இருக்கிறது.
"நீ ஜோதிடத்தை ஏற்றுக் கொள்கிறாயோ இல்லையோ? அல்லது அதை நம்புகிறாயோ இல்லையோ? ஆனால் எது எது எப்படி எப்படி நடக்க வேண்டுமோ அது அது அப்படியே நடந்து விடும்.
ஒரு கிராமத்தில் ஒரு ஜோதிடன் இருந்தான். அவனுக்கு ஒரு நண்பனும் இருந்தான். அந்த நண்பனுக்கு ஜோதிடத்தின் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை, ""ஜோதிடம் என்பது ஏமாற்று வேலை , ""சம்பாதிக்க அது ஒரு சிறந்த வழி, என்றெல்லாம் ஏளனமாகப் பேசுவான்.
இவன், இப்படி ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறானே! "இவன், ஜோதிடத்தை நம்ப வேண்டும் என்பது அந்த ஜோதிடரின் குறிக்கோளாக இருந்தது. எதிர்பாராத விதமாக அந்த ஜோதிடருக்கு, அவனுடைய நண்பனின் ஜாதகம் கிடைத்தது. நண்பனை அழைத்தான். அவனும் வந்தான்.
""நண்பா! உன்னுடைய ஜாதகத்தை இன்று கணித்தேன். நீ நாளை எதோ ஒரு வகையில் இனிப்பான "பால் பாயாசம் சாப்பிடப் போகிறாய் என்று ஜோதிடன் கூறினான்.
""அட போடா! எனக்கு முதலில் "பாயாசமே பிடிக்காது. எந்த விருந்துக்குப் போனாலும் பாயாசத்தை ஒதுக்கிவிடுவேன். அப்படி இருக்க, எனக்குப் பிடிக்காத ஒரு "பாயாசத்தை நான் எப்படிச் சாப்பிடுவேன். இது நடக்காத காரியம்... உன் ஜோஸ்யம் பொய் என்றான். ""இல்லை. இது நடக்கும், உண்மை என்றான் ஜோஸ்யன்.
மறுநாள் விடிந்தது. ஜோஸ்ய நண்பன் சொன்னபடி "பால் பாயாசம்
யாராவது கொண்டு வந்து கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று கலங்கிய அவன், ஜோஸ்யத்தைப் பொய்யாக்க வேண்டுமென்று, அருகில் இருந்த ஒரு காட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டான்.
மதியம், நான்கு வழிப்போக்கர்கள் காட்டிற்குள் பெரிய மூட்டை முடிச்சுகளுடன் வந்தனர். அதில் ஒருவன், "மதியமாகி விட்டது. ஏதாவது உணவருந்தி விட்டுப் போகலாம் என்றான். "சரியென்று மற்றவர்களும் கூற, அங்கிருந்த சுள்ளி விறகுகளையெல்லாம் பொறுக்கி, நான்கு கல்லை வைத்து அடுப்பை மூட்டி, மூட்டையைப் பிரித்து அதில் இருந்த பெரிய அடுக்கை எடுத்து அடுப்பில் வைத்துப் "பால் பாயசம் தயார் செய்தனர்.
பால் பாயாசம் கொதிக்கின்ற பொழுது ஐந்தாறு திருடர்கள் வந்து, பால் பாயாசம் தயாரித்துக் கொண்டிருந்த வழிப்போக்கர்களை அடித்து உதைத்து, அவர்களிடமிருந்து பணம், பொருட்களையெல்லாம் அபகரித்துக்கொண்டு, அவர்களை "ஓட ஓட விரட்டிவிட்டனர். அடி உதைக்குப் பயந்து, அதைப் பார்த்து ஒளிந்து கொண்டிருந்த ஜோதிடனின் நண்பன் ஒரு மரத்தின் மீது ஏறி பதுங்கிக்கொண்டான்.
நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்த கொள்ளையர்களில் ஒருவன், ""தலைவா! இங்கே பார்த்தீர்களா? நமக்குப் பொருள்களை, அள்ளிக் கொடுத்தவர்கள் ஏதோ "பால் பாயாசம் செய்து வைத்து விட்டு, அதையும் கொடுத்து விட்டுப் போய் இருக்கிறார்கள். இதை நாமும் சாப்பிடலாம் என்றான்.
""மடையா! அதை நாம் அருந்தக் கூடாது. ஒருவேளை அவர்கள் அதில் விஷம் கலக்கி வைத்து விட்டுப் போயிருந்தால் என்ன செய்வது? அதைச் சாப்பிட்டால் என்னாவது? ஆகவே முதலில் இதை யாராவது வேறொருவனை சாப்பிட வைத்து சோதித்துப் பார்த்த பின்புதான் நாம் சாப்பிட வேண்டும்! என்றான் தலைவன்.
""இங்கே சோதித்துப் பார்க்க ஆள் இல்லையே! என்று ஒருவன் சொன்னான்.
""ஏன் இல்லை? அதோ பாருங்கள் தலைவா! மரத்தின் மீது ஒருவன் இருக்கிறான். என்றான் இன்னொருவன்.
""பிடியுங்கள் அவனை - கொண்டு வாருங்கள் இங்கே! தலைவன் ஆணையிட்டான்.
அடுத்த நொடி அவன் பிடிபட்டான். அவனைக் கொண்டு வந்து தலைவன் முன் நிறுத்தினார்கள். ""ம்... எடுத்து அந்தப் பாயாசத்தை அவன் வாயில் ஊத்துங்கடா என்றான்.
""ஐயோ! என்னை விட்டு விடுங்கள்! எனக்குப் "பாயாசம் பிடிக்கவே
பிடிக்காது! வேண்டாம்.... வேண்டாம்.... என்று முரண்டு பிடித்தான் அந்த ஜோதிடனின் நண்பன். ""இவன் இந்தப் "பாயசத்தை குடிக்கமாட்டேன் என்கிறான் என்பதால் இதில் அவன் விஷம் கலந்திருப்பான் என்று தோன்றுகிறது. எனவே விடாதீர்கள் அவனை.... ஊற்றுங்கள் அவன் வாயில்! கட்டளையிட்டான் தலைவன்.
அமுக்கிப் பிடித்து அவன் வாயில் பாயாசத்தை ஊற்றினர்... "மடக்மடக்கென்று குடித்தான். ஒரு குவளை பாயாசம் அவன் வயிற்றுக்குள் போனதும் விட்டு விட்டனர் திருடர்கள். அலறி அடித்துக் கொண்டு "தப்பித்தோம் பிழைத்தோம் என்று காட்டை விட்டு ஓடி வந்து ஜோதிடனின் காலில் வந்து விழுந்தான் அவன் நண்பன்.
ஜோதிடம் பலித்து விட்டது. ஜோதிடம் என்பது கட்டுக்கதையல்ல. அது வானசாஸ்திரக் கணக்கு. இந்தக் கணக்கைக் கணக்கிட்டு சொல்பவர் ஜோதிடத்தில் தேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் ஜோதிடத்தை சரியாகக் கணக்கிட்டு எழுதியிருந்தால் ஜோதிடம் பொய்யாகாது.
எழுதுபவர் ஜாதகம் எழுதினால் அது சரியாக இருக்க வேண்டும். குறையுள்ள ஜாதகம் என்றும் உண்மை பெறாது. நேரமும், காலமும் ஜாதகத்தில் கணக்கிட்டு, சரியான ஜாதகமாக இருந்தால் நிச்சயம் சொன்னது பலிக்கும். ஏற்கெனவே சொன்னது போல ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தால் நடப்பதெல்லாம் நன்மையே.