திருச்செந்துார் முருகன் கோயில் பிரகாரங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்க தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2025 11:11
துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயில் பிரகாரங்களில், சினிமா பாடல்களுக்கு ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்க கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் கோவில் பிரகார பகுதிகளில் நின்று, சினிமா பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. கோயில் பிரகாரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கோவில் பிரகாரத்தில் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வகையில், ரீல்ஸ் வீடியோ எடுக்க கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக கோயிலை சுற்றி, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், திருக்கோவில் வளாகத்தில் திரைப்பட பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ ரெக்கார்டிங் செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகம் கூடும் இடமான கோயில் முன்புள்ள சண்முகவிலாச மண்டபம், வசந்த மண்டபம், பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் இடம் என, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.