108 அரியவகை மூலிகையால் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2025 12:11
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 அரியவகை மூலிகைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் யானை வடிவ அசுரனை வதம் செய்த இடம் என்பதால் அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இங்கே கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு மலை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 அரியவகை மூலிகைச்சாறு கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை சார்பில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இவ்வகை மூலிகை அபிஷேகம் நடைபெற்று வருகிறது. அறக்கட்டளை சார்பில் 109-வது ஆலயமாக வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் இன்று இந்த அபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு 108 மூலிகைச்சாறுகள் குடத்தில் நிரப்பி வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களுக்கு பிறகு மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த மூலிகை அபிஷேகம் செய்வதால் மழை வளம் பெருகி, பொதுமக்கள் துன்பம் நீங்கி உலகம் நன்மை ஏற்படும் என்பது சித்தர்கள் வாக்கு என்று அபிஷேகம் செய்த சிவனடியார்கள் தெரிவித்தனர்.