பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
11:06
கொளத்துாரில், 800 ஆண்டுகள் பழமையான, சோமநாத சுவாமி கோவிலில், 63 நாயன்மார்கள் சிலைகள் நிறுவ, பக்தர்கள், மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கொளத்துாரில், 800 ஆண்டுகள் பழமையான, அமுதாம்பிகை உடனுறை, சோமநாத சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, மாதவ சிவஞான முனிவர் இயற்றிய, அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் நுாலில், இக்கோவிலைப் பற்றிய பதிவுகள் உள்ளன. இக்கோவிலுக்குச் சென்று வழிபடுவோருக்கு, சந்திரதோஷம் நிவர்த்தி ஆகும் என்ற ஐதீகம் உள்ளது. கோவிலின் வலதுபுறம், 65 அடி நீள சன்னிதியில், கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் என்பவர், 63 நாயன்மார்கள் சிலை நிறுவ, ஹிந்து அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். இதையடுத்து, 2016ல், 1.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 63 நாயன்மார்கள் சிலை பிரதிஷ்டை செய்ய, அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலை சுற்றி வருவதற்கு, இடம் இல்லை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சிலைகள் மூன்று ஆண்டுகளாக, பிரதிஷ்டை செய்ய முடியாமல், கோவிலில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: சிலைகள் செய்ய, 2.5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. ஆனால், காழ்ப்புணர்ச்சியால் சிலர், சிலைகள் பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், ஹிந்து அறநிலையத் துறை அனுமதி வழங்கிய பிறகும், நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. இதனால் மூன்றுஆண்டுகளாக, சிலைகள் பிரதிஷ்டை செய்ய, போராடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.