பதிவு செய்த நாள்
07
ஜூன்
2019
12:06
உடுமலை:உடுமலை திருப்பதி, ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலுக்கு, சுவாமி சிலைகள், கொடி மரம் ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.உடுமலை, தளி
ரோடு, செங்குளம் அருகே, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
இக்கோவிலின், மகா கும்பாபிஷேகம், ஜூலை, முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது, பணி நிறைவடைந்துள்ள சன்னதிகளில் நிறுவப்பட உள்ள மூலாலய சுவாமிகள் மற்றும் உற்சவர் சிலைகள் ஊர்வலமான கரிகோலம் நிகழ்ச்சி நேற்று (ஜூன்., 6ல்) நடந்தது.
ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வேங்கடேச பெருமாள், அலமேலு தாயார், சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஹயக்கிரீவர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் மூலவர், உற்சவர் சிலைகள் மற்றும் கோவிலில் நிறுவப்பட உள்ள கொடிமரம் ஆகியவை, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
எஸ்.வி.,மைதானம் துவங்கி, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு வழியாக ஊர்வலம் சென்றது. மங்கள இசைக்கருவிகள் முழங்க, 200 முளைப்பாரிகள், ரேணுகாதேவி பஜனைக் குழுவினர், கோவில்பட்டி கோலாட்டக்குழுவினர், கேத்தனூர் கும்மியாட்டக்குழுவினர், ராஜாவூர் தேவராட்டம் குழுவினர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று ஜூன்., 7ல் முதல், 9ம் தேதி வரை, சுவாமிகளுக்கு, திருமஞ்சன ஜலாபிஷேகம், கோவில் வளாகத்தில் நடக்கிறது.