பதிவு செய்த நாள்
17
மார்
2012
10:03
சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக, திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று லட்சார்ச்சனை நடந்தது. மாத மற்றும் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் முடிந்து, 18ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும், மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அவ்வாறு பங்குனி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை 13ம் தேதி மாலை, 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் காலை, கணபதி ஹோமத்துடன் கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம் (சந்தன அபிஷேகம்) போன்ற சிறப்பு அபிஷேகங்களும், அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் போன்றவைகளும் நடத்தப்பட்டு வருகிறது. கோவிலில் நேற்று லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. மாத பூஜைகள் முடிந்து நாளை (18ம் தேதி) இரவு, 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். தொடர்ந்து, பங்குனி உத்திர உற்சவத்திற்காக, கோவில் நடை வரும் 27ம் தேதி மாலை, 5.30 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் காலை, உற்சவத்திற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி, கோவிலில் பங்குனி உத்திர உற்சவமும், தொடர்ந்து பம்பை நதியில் உற்சவர் ஆராட்டு (தீர்த்தவாரி) நிகழ்ச்சியும் நடைபெறும். அன்றிரவு கொடியிறக்கப்பட்டு, இரவு நடை அடைக்கப்படும்.