பதிவு செய்த நாள்
17
மார்
2012
10:03
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்துள்ளதாவது: இக்கோயில் கோடை வசந்த உற்சவம் மார்ச் 27 முதல் ஏப்.,4 வரையும், பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு ஏப்.,5லும் நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று, செல்லூர் திருவாப்புடையார் கோயிலுக்கு அம்மன், சுவாமி எழுந்தருளி, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து, மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, கோயில் வந்து, பின் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் தீபாராதனை நடக்கும். இந்நாட்களில் அம்மன், சுவாமிக்கு தங்க கவசம், வைரக்கிரீடம் சாத்துப்படி, தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் நடத்தப்படமாட்டாது. மார்ச் 21ல் பூச்சொரிதல் : தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா, மார்ச் 21ல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லாக்கில், மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி முன் புறப்படுகிறார். மாசி வீதிகள், காமராஜர் ரோடு வழியாக தெப்பக்குளம் கோயிலுக்கு வந்து சேரும். பின், மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடக்கும். அம்மன் செல்லும் வீதிகளில் மலர், மாலைகளை காணிக்கையாக மக்கள் வழங்கலாம், என தெரிவித்தார்.