பதிவு செய்த நாள்
17
மார்
2012
10:03
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் குருசாமி கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகள் கண்டகொள்ளாமல் உள்ளனர். ராஜபாளையம் அம்பலபுளி பஜாரில் சமாது குருசாமி கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலுக்கு, ராஜபாளையம் தவிர, சுற்றுகிராமத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடக்கின்றன. கோயில் உள்ள இதே தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. கடையின் எதிர் தெருவில் போஸ்ட் ஆபிஸ் வேறு உள்ளது. கடைகள் நிறைந்த பகுதியான இங்கு டாஸ்மாக் கடை இருப்பதால், பக்தர்கள், பெண்கள், வியாபாரிகள் என பலரும் தினமும் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். போதையில் பாட்டில்களுடன் கடையில் இருந்து வெளியே வரும் குடிமகன்கள் ,ரோட்டில் தள்ளாடி செல்கின்றனர். டூ வீலர்களில் செல்பவர்கள் மீது மோதி , தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். கோயிலுக்கு செல்லும் பெண்களை கேலி செய்தல், ரோட்டில் பாட்டில்களை உடைத்தல், தட்டி கேட்கும் வியாபாரிகளை மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இரவில் பூட்டியிருக்கும் கடைவாசலை "பார் போல பயன்படுத்துகின்றனர். காலையில் வரும் வியாபாரிகள் கடை திறக்க முடியாது ,அதை சுத்தம் செய்வதற்குள் படாதபாடு படுகின்றனர் . தற்போது மின்தடை வேறு அடிக்கடி ஏற்படுவதால், கடை வாசலையே கழிவறையாகவும் குடிமகன்கள் மாற்றுகின்றனர். இதை தொடர்ந்து, இப்பகுதி மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ,டாஸ்மாக் கடையை மாற்றகோரி பலமுறை போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் கண்டுக்காமல் உள்ளனர். இதனால் பக்தர்களும், வியாபாரிகளும் தினமும் பல வேதனைகளை அனுபவிக்கின்றனர். கோயில் புனிதம் கருதி, டாஸ்மாக் கடையை இடம்மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.