திருவாரூர் அருகே சிவன் கோவிலில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2012 10:03
திருவாரூர்: திருவாரூர் அருகே சிவன் கோவில் திருப்பணியின் போது பூமிக்கு அடியில் நான்கு அடி ஆழத்தில் இரண்டு ஐம்பொன் சிலைகளை தொழிலாளர்கள் கண்டெடுத்து தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா தோட்டக்குடி கிராமத்தில் ராஜராஜசோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட மணிகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில், நேற்று கோவில் வளாகத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு கடப்பாரையால் தொழிலாளர்கள் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது, நான்கு அடி ஆழத்தில் குழியை தோண்டிய நிலையில் ஏதோ தட்டுப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் முழுவதும் அகலமாகவும், ஆழமாகவும் குழியை தோண்டினர். குழிக்குள் இருந்து, இரண்டு ஸ்வாமி ஐம்பொன் சிலைகளை கண்டெடுத்தனர். இரண்டு அடி உயரத்தில் சிவகாம சுந்தரி அம்மன் சிலை ஒன்றும், ஒன்றரை அடி உயரத்தில் பிரதோஷ நாயனார் சிலை ஒன்றும் இருந்தது. இந்த சிலைகளின் மொத்த எடை 15 கிலோ இருந்தது. இதுகுறித்து உடனடியாக தோட்டக்குடி வி.ஏ.ஓ., குமார், குடவாசல் தாசில்தார் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு தாசில்தார் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் சென்று சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு ஐம்பொன் சிலைகளையும் பத்திரமாக குடவாசல் தாலுக்கா அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.