பதிவு செய்த நாள்
14
ஜூன்
2019
12:06
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி வழியில் அமைந்துள்ள விஸ்வரூப ஜயமங்கள பஞ்ஜமுக ஸ்ரீ ஆஞ்ஜநேயர் கோயிலில் வருகிற 23.6.19 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஒரு காலத்தில் இந்த பஞ்சவடீயில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்ஜநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்ஜநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சிலை உருவாக்கப்பட்டது.
பஞ்சமுக ஆஞ்ஜநேயரின் தோற்றம் பற்றிய ராமாயணக்கதை: ராம –ராவண யுத்தத்தின் போது, பாதாளலோக அரசனான மஹிராவணாவின் உதவியை ராவணன் நாடினான். அனுமார், ராம லட்சுமணர்களைப் பாதுகாக்க, தனது வாலையே ஒரு கோட்டையாக மாற்றி, அதில் பத்திரமாக அவர்களைப் பாதுகாத்தார். ஆனாலும், மஹிராவணாவோ, விபீஷணன் உருவம் எடுத்து வந்து, அவர்களை சிறைப் பிடித்து, பாதாளலோகம் கூட்டிச் சென்றான்.
அதை அறிந்த அனுமார், அவர்களை பத்திரமாக மீட்க, பாதாள லோகம் சென்றார். அங்கு சென்ற பிறகு தான், அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தால் தான், மஹிராவணாவின் உயிர் பிரியும் என்பதை அறிந்தார். உடனே, தன் முகத்துடன், நரசிம்ம சுவாமி, ஹயக்ரீவ சுவாமி, லஷ்மி வராக சுவாமி மற்றும் மஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்து, அந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தார். இதனால், கொடியவன் மஹிராவணன் மாண்டான். பிறகு அனுமாரும், ராம லட்சுமணர்களை பத்திரமாக மீட்டு வந்தார். இந்த புண்ணிய ஸ்தலத்தில் இன்னும் 9 நாட்களில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.