பதிவு செய்த நாள்
17
மார்
2012
10:03
பெ.நா.பாளையம் : பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலைச் சுற்றி பெரும்பதி, பெருக்கைப்பதி, மாங்குழி, பசுமணி, பசுமணிபுதூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. மலை அடிவாரத்திலிருந்து 4 கி.மீ., தொலைவு உள்ள இக்கிராமங்களுக்கு செல்ல மலைவாழ் மக்கள் கஷ்டப்பட்டனர். இதே போல, பக்தர்களும் ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல பாறைகள் நிறைந்த மலைப்பாதையை, பயன்படுத்தி வந்தனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக கடந்த 2009ம் ஆண்டு பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தில் 4.3 கி.மீ., தொலைவு மலைப்பாதை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலையாக மாற்றப்பட்டது. இச்சாலை முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் பாலமலை அடிவாரத்திலிருந்து கோவில் வரை செல்லும் பாதையின் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், மலைப்பாதையின் ஓரத்தில் ஏற்பட்ட மண் அரிப்பால், பள்ளம் உருவாகியுள்ளது. பாதையில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, இப்பள்ளத்தில் இறங்கி நிலைதடுமாறி விபத்தை சந்திக்கும் ஏற்பட்டுள்ளது. பாலமலை பக்தர்கள் கூறுகையில்,"வரும் சித்ரா பவுணர்மி தேர்திருவிழா பாலமலை ரங்கநாதர் கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் பாலமலை மலைப்பாதையில் விடிய, விடிய சென்று வரும். அதற்குள் பாதையை பழுது பார்த்து, வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.