பதிவு செய்த நாள்
17
மார்
2012
10:03
ஈரோடு: சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகள் நேற்று மாலை ஈரோட்டுக்கு விஜயம் செய்தார். ஈரோடு ஸ்ரீசக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்வாமிகள் அருளுரையில் கூறியதாவது: நாம் அனைவருக்கும் பகவான் மீது பக்தி இருக்க வேண்டும். உலகம் பகவானின் சிருஷ்டியில் உருவானது. பகவான் உலகை காக்கிறார். நாம் செய்யும் தர்மத்தின் பலனை வழங்குகிறார். நம் பக்தி, ஆராதனைக்கான அனுக்கிரகத்தை வழங்குகிறார். இந்த நம்பிக்கையை அறியாதோருக்கு வாழ்வு இல்லை. பகவானை நாம் பூஜித்தாலும், பூஜிக்காவிட்டாலும், அவருக்கு பலன் ஏதுமில்லை. ஆலமரத்தடியில் எப்போதும் நிழல் இருக்கும். மரத்தடியில் யார் ஒதுங்கினாலும் நிழல் கிடைக்கும். நிழல் நம்மைத்தேடி வராது. அதுபோல, பகவானின் நிழலைத்தேடிச் சென்றால், ஆறுதல் கிடைக்கும். ஹிந்துக்களில் பல கடவுள் இருக்கிறார்களே. அதில் யாரை அதிகம், குறைவாக பூஜிக்க வேண்டும்? யார் நல்ல பலன் தருவார்? என பலர் கேட்கின்றனர். ஹிந்து மதத்தை புரியாதவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். பகவான் ஒருவனே, எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளார். கோவில்கள் பலவாக இருந்தாலும், அங்குள்ள விநாயகர், ஈஸ்வரன், திருமால் என அனைத்தும், வெவ்வேறு பாத்திரங்களாக உள்ளனர். பூஜிப்பதில் எந்த பாதகமும், வித்தியாசமும் இல்லாமல், வழிபட வேண்டும். வித்தியாசம் பார்ப்பது பாவம். ஆண், பெண், குழந்தை என எல்லாமுமாக பகவான் உள்ளார். ராமநாமமும், சிவகோஷமும் கூறலாம். எல்லாம் புண்ணியம்தான். பகவான் நாமத்தை உச்சரிக்காத நாக்கு, பார்க்காத கண், நினைக்காத மனம், சரீரத்தால் பூமிக்கு பலனில்லை. பகவானில் மகிமை அபாரம். அதை வர்ணிக்க முடியாது. ரேடியோ கேட்கவும், பத்திரிகை படிக்கவும் நேரம் ஒதுக்குவதுபோல, பகவானை பூஜிக்க நேரம் ஒதுக்குங்கள். பூஜிக்கும்போது, பகவானைத்தவிர வேறு எதையும் நினைக்காதீர்கள். நல்லவைகளை நினைத்து பூஜித்தால், அவர் நலனைத் தருவார். பகவான் முன் நாம் எல்லோரும் சமம். இந்த தத்துவத்தை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அருளுரையில் கூறினார். தொடர்ந்து பஜனை, அன்னதானம் நடந்தது. இன்று, காலை 9 மணிக்கு இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பின், லக்காபுரம் புதூர் லட்சுமி நாராயணர் கோவிலில் ஸ்வாமிக்கு பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 9.30 மணிக்கு ஸ்வாமி அருளுரையும், 10 மணிக்கு அங்குள்ள கோசாலை விஜயமும் நடக்கிறது.