பதிவு செய்த நாள்
19
மார்
2012
11:03
திருப்பூர்:திருப்பூர் சாரதாலயா கோவில் கும்பாபிஷேக விழா, சிருங்கேரி சுவாமிகள் தலைமையில் இன்று நடக்கிறது.கடந்த 1987ம் ஆண்டு, ஜகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகள் தமிழகம் விஜயம் செய்தபோது, திருப்பூர் அவிநாசி ரோட்டில் சாரதாலயா கோவில் அமைக்கும் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். 1988ல் இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 16 ஆண்டுகளுக்குபின், அவர் திருப்பூர் விஜயம் செய்துள்ளார். அவரது திருக்கரங்களால், இக்கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.எந்த ஊரில் சாரதாம்பாளுக்கு கோவில் இருந்தாலும், அங்கு வழிபாடு செய்தால், சிருங்கேரியில் உள்ள சாரதாம்பாளை வழிபட்டால் கிடைக்கும் பலன் கிடைக்கும் என்று, ஆதிசங்கரர் அருளியுள்ளார். அவ்வகையில், இக்கோவிலில் சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் நடைமுறைப்படி, பூஜைகள் நடந்து வருகின்றன. திருப்பூரில் பக்தர்களால் வழிபாடு நடத்தப்பட்டு வரும், இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 10 மணிக்கு சுவாமிகளால் நடத்தப்படுகிறது. சிருங்கேரி சம்பிரதாயப்படி, முதலில் கோவிலில் அமைந்துள்ள மூலவரான சாரதாம்பாளுக்கு அபிஷேகம் நடத்திய பின், கோபுரத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அந்நடைமுறையில், இன்று காலை இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும், சுவாமிகள் அருளுரை வழங்குகிறார். அதன்பின், கோவிலுக்கு அருகே அமைந்துள்ள கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பின்புறம் உள்ள கோபால்ட் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.