கூட்டு உழைப்பால் கிடைத்த பணத்தை கூட்டாளிக்கும் கொடுங்கள். தேவைக்கு அதிகமாக பணம் சேர்ந்தால் தர்மம் செய்யுங்கள். கொடுக்கின்ற மனம் இல்லாவிட்டாலும் தவறில்லை; பிறர் கொடுப்பதைத் தடுப்பது நல்லதல்ல. துன்பத்தைக் கண்டு எல்லா உயிர்களும் பயப்படுகின்றன. இதை உணர்ந்தவர்கள் மனதாலும் பிறரை துன்புறுத்த மாட்டார்கள். தினமும் தியானம் செய்தால் மன ஆற்றல் பெருகும். தியானமே பிறவி என்னும் கடலைக் கடக்க உதவும் கப்பல்.
பிறர் இகழ்ந்தாலும் கோபம் கொள்ளாதவரே அறிஞர். பொறுமை, அமைதியே அவர்களின் இயல்பு. பிறருக்கு தீங்கு செய்பவர் துறவியாக இருந்தாலும் நரகம் செல்வர். உடையால் மட்டும் இன்றி உள்ளத்தாலும் துறவு எண்ணம் வேண்டும். நோயைத் தீர்க்கும் கசப்பு மருந்து போல நல்லவர்களின் அறிவுரை கடினமாக இருந்தாலும் பின்பற்றுங்கள். எதிர்காலம் ஒளிமயமாகும்.
தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் மனம் துாய்மை பெறும். பாவம் பறந்தோடும். மற்றவர் பொய் பேசினாலும், நீங்கள் உண்மை பேசுங்கள். உண்மை ஒன்றே மனதை தூய்மையாக்கும். உண்மை பேசுபவர்களை, பெற்ற தாயாக போற்றுங்கள். அவர்களால் உலகம் நன்மை பெறுகிறது. நேர்மை கொண்டவர்களும் வாழ்வில் சிரமப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் ஆழ்மனதில் அமைதி குடியிருக்கும். நம்பிக்கை இல்லாமல் நல்லறிவும், நல்லறிவு இல்லாமல் ஒழுக்கமும் உண்டாகாது.