1936ல் வாரியார் சுவாமிகள் சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் பயணம் செய்தார். எழும்பூரில் வண்டி நின்றது. மூன்றாம் வகுப்பில் அவர் அமர்ந்திருந்த போது, டிக்கட் பரிசோதகர் ஜம்புவேல் முதலியார், சாதாரண உடையில், அதே பெட்டியில் ஏறி, வாரியார் எதிரில் அமர்ந்தார். அவருக்கு தாம்பரத்துக்கு பிறகு தான் டியூட்டி . அங்கு தான்யூனிபார்ம் அணிவார். சொந்த ஊர் திருச்சி தான். வாரியாரைக் கண்டதும் ஆனந்தமான அவர்,ஐயா! நானும் முருக பக்தன் தான். அதிலும் உங்கள் பேச்சைக் கேட்டு பக்தனானேன்! என்று உளமுருகி சொன்னார். இந்த சமயத்தில், இன்னொரு பயணி மூன்று ஜவுளி மூடைகளுடன் ஏறினார்.வாரியாரிடம், ஐயா! நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்றார். திருச்சிக்கு என்றார் வாரியார். இந்த ஐயா எங்கே போகிறார்? என்று முதலியாரை நோக்கி கையை நீட்டினார். அவரும் திருச்சிக்குத் தான், என்றார் வாரியார். ரொம்ப நல்லதா போச்சு, என்ற பயணியிடம்,நாங்கள் திருச்சிக்குப் போவதில் உமக்கு என்ன நன்மை? என்றார் வாரியார். அதென்ன அப்படி சொல்லிட்டீங்க! நானும் திருச்சிக்கு தான் போறேன். இந்த மூடைகளுக்கு நான் லக்கேஜ் கட்டலே! இந்த டி.டி. ஆருங்க இருக்காங்களே! வானத்திலே இருந்து குதிச்சவங்க மாதிரி பேசுவாங்க! அவங்க பாட்டன் வீட்டு ரயிலு மாதிரி மூன்று மூடை இருக்கு! எடு காசைன்னு கத்துவாங்க! அதனாலே, இதிலே ஒரு மூடை உங்களுடையதுன்னு சொல்லிடுங்க! ஒன்றை இந்த ஐயாவுக்குரியதுன்னு சொல்லிடட்டும். இன்னொன்று என் டிக்கட்டிலே கழிஞ்சுடும், என்றார். முதலியாருக்கு முகம் சிவந்து விட்டது. தாம்பரத்தில் யூனிபார்ம் போட வேண்டியவர், சேத்துப்பட்டிலேயே அணிந்து கொண்டு வந்து நின்றார். பயணிக்கு பேயறைந்தது போல் ஆகிவிட்டது.எடு அபராதத்தை என்று காட்டமாகக் கேட்டார். பிறகு வாரியார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.