ஒருமுறை காங்கேயத்தில் உரை நிகழ்த்தி விட்டு, மறுநாள் காலை மதுரை செல்ல முடிவு செய்திருந்தார் வாரியார். காங்கேயத்தில் இருந்து பஸ்சில் பழநி சென்று மதுரைக்கு ரயிலில் போக வேண்டும் என்பது திட்டம். காலை 6மணிக்கு புறப்படும் பஸ் 11 மணிக்கு பழநியை அடையும். 11.30 மணிக்கு ரயில் கிளம்பும். ஆனால், பழநியை நெருங்கிய சமயத்தில், ஒரு ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பஸ் ரயில் நிலையத்தை அடையவே 11.30 மணி ஆகிவிட்டது. மூடைகளை இரண்டு கூலிகள் எடுத்துச் செல்ல வாரியார் ஸ்டேஷனுக்குள் விரைந்தார். இதற்குள் வண்டி கிளம்பி விட்டது. அடுத்த ரயில் மாலை 5.30க்கு தான். ரயில் நிலையத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் உடமைகளுடன் தங்கிய வாரியார், கட்டுரைகள் எழுத ஆரம்பித்து விட்டார். மாலை ரயிலில் முதல் வகுப்பில் ஏறினார். அந்த கூபேயில், பக்தர் ஒருவர் அமர்ந்திருந்தார். வாரியார் உள்ளே வந்ததைக் கண்ட அவர், ஆச்சரியப்பட்டார். ஐயா! நான் ஒவ்வொரு கார்த்திகைக்கும் பழநியாண்டவருக்கு அபிஷேகம் செய்ய செல்வேன். அந்த நாளில், உங்களுடைய சொற்பொழிவு இடம் பெற்றால் நன்றாக இருக்கும். அதற்குரிய தொகையை நானே தந்து விடுவேன், எனச்சொல்லி நூறு ரூபாய் தாளை நீட்டினார். இது நிகழ்ந்தது 1945ல். 1955 வரை தொடர்ச்சியாக பத்தாண்டுகள் கார்த்திகைக்கு சென்று பழநியாண்டனை தரிசிக்கும் பாக்கியத்தையும், பழநித் திருப்புகழ் முழுமைக்கும் விளக்கமும் சொல்லும் வாய்ப்பையும் பெற்றார் வாரியார். ரயிலைத் தவற விட்டதால் தானே இப்படியொரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது, என்கிறார் வாரியார்.