பதிவு செய்த நாள்
02
ஜூலை
2019
03:07
திருப்பத்தூர் : திருப்பத்தூரில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த, நடுகற்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர், பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த, வலசை மலையடிவாரத்தில் உள்ள, வேடியப்பன் கோவிலில், எட்டி மரத்தின் கீழே உள்ள, ஐந்து கற்களை, பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். அவற்றை ஆய்வு செய்ததில், நான்கு நடுகற்கள் மற்றும் ஒன்று சதிக்கல் என, தெரிய வந்துள்ளது.மூன்று நடுகற்களிலும், கையில் அம்பும், வில்லும் ஏந்திய நிலையில், வீரர்கள் நிற்கின்றனர். நான்கா வது நடுகல்லில், முதுகில் அம்புகள் தாங்கிய கூட்டையும், குறுவாளுடன் தயார் நிலையில், வீரன் நிற்கின்றான்.
சற்று தொலைவில் உள்ள சதிக்கல்லில், மது குடத்தை கையில் ஏந்திய நிலையில், பெண் ஒருவர் நிற்கிறார்.விஜயநகர பேரரசின் துவக்க காலமான, 13ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக, இந்த நடுகற்கள் மற்றும் சதிக்கல் உள்ளது.இப்பகுதியில், பல நடுகற்கள் உள்ளன. அவற்றை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.