பதிவு செய்த நாள்
06
ஜூலை
2019
02:07
காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க, பக்தர்கள் அதிகளவில் வருவதால், ஆனி கருடசேவை மற்றும் ஆடி கருடசேவை ஆகிய இரு நாட்கள் தவிர, மற்ற நாட்களில், ஆக. 17ம் தேதி வரை, இரவு 8:00 மணி வரை, தரிசனம் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த திங்கட்கிழமை முதல், அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. காலை, 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை அத்தி வரதரை பக்தர்கள் தரிசிக்கலாம் என, தெரிவிக்கப் பட்டிருந்தது.
பின், வரும் 10ம் தேதி வரை, கோடை உற்சவமும், 11ல் ஆனி கருடசேவையும், 25 முதல், ஆக.,4 வரை, ஆடிப்பூர உற்சவமும், ஆக.13 மற்றும் 14ல் ஆளவந்தார் சாற்றுமுறையும், ஆக.,15ல் ஆடி கருடசேவையும் நடைபெற உள்ளது.
இந்த நாட்களில், மாலை 5:00 மணி வரை மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும் என, கோவில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.ஆனால், நேற்று 5ம் தேதி, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அத்தி வரதரை தரிசிக்க குவிந்ததால், இன்று 6ம் தேதிமுதல், இரவு 8:00 மணி வரை, தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவர் என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
ஆனி கருடசேவை, ஆடி கருடசேவை ஆகிய இரு நாட்களில், மாலை, 5:00 மணியுடன் தரிசனம் முடிவதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.மற்ற நாட்களில், இரவு, 8:00 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை உற்சவம் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.