பதிவு செய்த நாள்
06
ஜூலை
2019
02:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், கிராம மக்கள் கோவில் கட்டுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலை கிராமத்தில், ரேணுகை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இடிக்கப்பட்டு, தற்போது ஊர் மக்கள் சார்பில் அந்த இடத்தில் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் கோபுரம் போன்றவை கட்டும் பணிநடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இக்கோவில் அருணாசலே ஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது என்று நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அறிவிப்பு பலகையை அகற்றவும், இது ஊர் கோவில் என்று அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்நிலையில், கோவிலில் கட்டுமான பணிகள் நடந்து வருவதையறிந்த, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நடந்திருந்த பணியை நிறுத்தும்படி கூறினர். அப்பகுதி மக்கள் திரண்டு, இணை ஆணையரிடம் ஏன்? பணியை நிறுத்த வேண்டும்; இது ஊருக்கு சொந்தமான கோவில். மூன்று தலைமுறைகளாக வழிபட்டு வருகிறோம். கிரிவலப்பாதையில் இருப்பதால், இக்கோவில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவில் அல்ல என்றனர்.
இது குறித்து ஞானசேகரன் கூறுகையில், ” இந்த கோவில், அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. கட்டுமான பணிகள் செய்ய அறநிலையத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதி பெறாமல் பழைய கோவில் இடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோவில் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது,” என்றார்.