பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
12:07
திருப்பூர்:திருப்பூர் பழைய பஸ் நிலையம் பின், காமாட்சி அம்மன் கோவில் வீதியில், சித்தி விநாயகர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோவிலில் அரசு, வேம்பு மரங்கள் ஒருங்கிணைந்து வளர்ந்துள்ளது.கோவிலில் இன்று (ஜூலை., 9ல்) காலை அரசு - வேம்பு திருக்கல்யாண விழா, நேற்று (ஜூலை., 8ல்) நடைபெற்றது.
இதையொட்டி, விஷேச யாக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, அரச மரம் சிவனாகவும், வேம்பு பார்வதியாகவும் பாவிக்கப்பட்டு, பட்டு வேட்டி உள்ளிட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் புடவையில் நகைகள், வளையல்கள் சாத்தப்பட்டு அலங்கரிக்கப் பட்டது. தொடர்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் ’ஹர ஹர மகாதேவா’, ’ஓம் சக்தி, பராசக்தி’ என்றும் கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதன்பின், விநாயகருக்கு அலங்கார பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் விஸ்வமூர்த்தி செய்து இருந்தார்.