திருவாரூர் ஸ்ரீஞானபுரீ கோவிலில் சாதுர்மாஸ்ய விரதானுஷ்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2019 02:07
திருவாரூர்: ஸ்ரீஞானபுரீ சங்கடஹர ஸ்ரீ மங்கள மாருதி கோவிலுக்கு சாதுர்மாஸ்ய விரதானு ஷ்டத்தை முன்னிட்டு ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் விஜயம் செய்கிறார்.
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குரு ஸ்தலத்தை அடுத்துள்ள திருவோணமங்கலம் ஸ்ரீ ஞானபுரீ என்று அழைக்கப்படும் சித்திரகூட ஷேத்திரம் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோவிலுக்கு ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் கடந்த பிப்ரவரி மாதம் விஜயம் செய்தார். அங்கு, திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து முடித்து, கும்பாபி ஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தர விட்டார். மேலும் மகா சுவாமிகள் இக்கோவிலில் சாதுர்மாஸ்ய விரதானுஷ்டானம் செய்யவும் அருள்புரிந்தார்.
அதன்படி வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள் விஜயம் செய்கிறார். தொடர்ந்து வரும் 16ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 13 ம் தேதி வரை மகா சுவாமிகள் கோவிலில் எழுந்தருளி சாதுர்மாஸ்ய விரதானுஷ்டம் செய்கிறார். அப்போது பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு சாதுர்மாஸ்ய விரத சேவா ஸமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.